Home மாவட்டங்கள் பெங்களூர் இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இசை நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு, நவ. 25-
பெங்களூரு நகரில் நடைபெறவுள்ள பிரபல பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசாஞ்சின் இசை நிகழ்ச்சிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வருகிற 29-ந்தேதி தில்ஜித் தோசாஞ்சின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
மர்ம நபர்கள் அனுப்பியுள்ள அந்த மிரட்டல் இ-மெயிலில், இசை நிகழ்ச்சிக்கு மெட்ரோ ரெயிலில் வரக்கூடாது என்றும், குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ‘காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மிரட்டல் தகவல் ஹூப்பள்ளி-தார்வாட் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இ-மெயில் முகவரிக்கு வந்துள்ளது. இச்சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்ட போலீசார், பெங்களூரு வடக்கு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டல் இ-மெயில் எங்கிருந்து வந்தது, அதனை அனுப்பிய மர்ம நபர்கள் யார், இதன் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மறுஆய்வு செய்யப்பட உள்ளன.