Home செய்திகள் தேசிய செய்திகள் பிரதமர் மோடியைப் பாராட்டி அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் மோடியைப் பாராட்டி அமைச்சரவை தீர்மானம்

புதுடெல்லி, அக். 7-
குஜராத் முதல்-வராகவும், பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து பொதுச் சேவை செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை நேற்று கூடியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: “கடந்த 25 ஆண்டுகளில் குஜராத் முதல்-வராகவும், பிரதமராகவும் மோடி ஆற்றிய சாதனைகளைப் பாராட்டி அமைச்சரவை தீர்மானம் இயற்றியுள்ளது. ‘தேசத்துக்கு முன்னுரிமை; குடிமக்களுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் பிரதமர் மோடியின் அசாதாரண பயணத்தை இந்தத் தீர்மானம் கொண்டாடுகிறது. குஜராத்தில் அவர் பெற்ற 3 மகத்தான வெற்றிகளும், தொடர்ந்து நடைபெற்ற 3 மக்களவைத் தேர்தல்களில் கிடைத்த ஆதரவும், பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நீடித்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றன” என்றார். நாட்டின் வளர்ச்சிப் பார்வை, 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து அகற்றியது, சமூகத்துக்கு அதிகாரமளித்தல், தற்சார்பு இந்தியாவுக்கான அடித்தளங்களை உருவாக்குதல், குடிமக்களுக்கு சேவை செய்ய உயரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், பதற்றமான காலங்களில் உறுதியான தலைமை, நக்சல்களுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள், உலக அரங்கில் இந்தியாவின் குரலை வலுப்படுத்தியது, 2047-ம் ஆண்டுக்குள் வளமான, தன்னிறைவு பெற்ற, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சி ஆகிய 10 அம்சங்களைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நீண்டகால பங்கு மூலதனம் வழங்கவும், உலக அளவில் போட்டியிடக்கூடிய புதிய தலைமுறை இந்திய நிறுவனங்களை உருவாக்க உதவவும், எஸ்எம்இ வளர்ச்சி நிதியை அமைக்க ரூ.10,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.