முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி முதலிடம்

புதுடெல்லி: ஜூன் 3
ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளி, கவுதம்அதானி முதல் இடம் பிடித்துள்ளார்.
அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக் காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் 2023-ம் ஆண்டு ஜனவரிமாதம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து அதானி குழுமத்தின்பங்கு மதிப்பு மிகப் பெரும் அளவில் சரிந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இதையடுத்து உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், 3-வது இடத்திலிருந்த அதானி, 20 -வது இடங்களுக்கு பின்னால் தள்ளப்பட்டார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கு விசாரணையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் அதானி குழுமத்துக்கு சாதகமாக இருந்துவந்த நிலையில், சென்ற ஆண்டின் இறுதியிலிருந்து அதானிகுழுமத்தின் பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கின. இந்நிலையில், தற்போது அவரது சொத்து மதிப்பு பெருமளவில் உயர்ந்துள்ளது.
ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, தற்போது ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 111 பில்லியன் டாலர் (ரூ.9.21 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு அதானி முதல் இடத்திலும் 109 பில்லியன் டாலர் (ரூ.9 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு முகேஷ் அம்பானி 2-வது இடத்திலும் உள்ளனர். உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் அதானி 11-வது இடத்திலும் முகேஷ்அம்பானி 12-வது இடத்திலும் உள்ளனர். தேர்தல் கருத்து கணிப்பில்பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று வெளியான நிலையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.