Home செய்திகள் தேசிய செய்திகள் தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை நீக்க கோரிக்கை

தேர்தல் ஆணையர்களின் சட்டப் பாதுகாப்பை நீக்க கோரிக்கை

புதுடெல்லி, அக். 22-
தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் கமிஷனர் நியமனச் சட்டம், தேர்தல் ஆணையர்கள் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதிக்கிறது. தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இந்தச் சட்டப் பாதுகாப்பை நீக்க வேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தேர்தல் ஆணையர்கள் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்களா? அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பைத் திரும்பப் பெற வேண்டும். தேர்தல் ஆணையர்கள் மீதான இத்தகைய சுதந்திரத்தை பிரதமர் மோடி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல்கள் எந்தவிதப் பாகுபாடும் இன்றியும், நேர்மையாகவும் நடத்தப்பட்டால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறட்டும்.” இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.