
பெங்களூர்: செப். 28-
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கியபோது இண்டிகோ விமானத்தின் பின்புறம் ஓடுதளத்தில் உரசிய சம்பவம் நடந்துள்ளது; இருப்பினும் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அசாம் மாநிலம் கௌஹாத்தியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோ நிறுவனத்தின் ‘6E 6542’ விமானம் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது. தரையிறங்கும்போது ‘டேல் ஸ்டிரைக்’ எனப்படும் விமானத்தின் பின்பகுதி ஓடுதளத்தில் உரசியது. பலத்த காற்று வீசியதன் காரணமாகவே விமானம் இணையும்போது அதன் பின்பகுதி ஓடுதளத்தில் பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் முயற்சியில் தரையிறக்க முடியாத நிலையில், இரண்டாவது முயற்சியில் விமானம் பத்திரமாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் அல்லது ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை; அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் தற்காலிகமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு, தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. விமானம் அசாதாரணமாக ஓடுதளத்தில் உரசியது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேல் ஸ்டிரைக் என்றால் என்ன?
விமானம் டேக்-ஆஃப் (புறப்படும்) ஆகும்போதோ அல்லது தரையிறங்கும்போதோ அதன் பின்புற பகுதி ஓடுதளத்தில் தொடுவதையே ‘டேல் ஸ்டிரைக்’ என்று அழைக்கின்றனர். பலத்த காற்று, மோசமான வானிலை அல்லது தரையிறங்கும்போது விமானத்தின் கோணத்தில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இது நிகழலாம்.
இத்தகைய சம்பவங்களுக்குப் பிறகு விமானம் முழுமையான தொழில்நுட்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இச்சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்ககம் (டி.ஜி.சி.ஏ) விசாரணை நடத்த வாய்ப்புள்ளதுடன், அதன் பிறகே துல்லியமான காரணம் தெரியவரும்.
இந்த மாதத்தில் மற்றொரு சம்பவம்:
இந்த மாத தொடக்கத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் ஒன்று ‘விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்’ கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போதும் பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக தப்பினர்.













