
புதுடெல்லி: செப். 28-
இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை நடைபெறவிருந்த 3 நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் திங்கள்கிழமை முதல் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்க வேண்டும், அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது வங்கி ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்வதற்காக உயர்மட்டக் குழுவை உடனடியாக அமைக்க பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, சாத்தியமான மாற்று வழிகளை அந்தக் குழு ஆராய்ந்து முடிவு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 நாள் வேலைவார கோரிக்கை தொடர்பாக நடைமுறைக்கு ஏற்ற வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கான செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர். 2024 மார்ச் 8-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள நிலுவைக் கோரிக்கைகள் குறித்தும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரையாண்டு கணக்கு முடியும் செப்டம்பர் மாத இறுதியில் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்ததால், நாடு முழுவதும் வங்கிச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, தொடர்ந்து 3 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றிருந்தால் வாடிக்கையாளர்களின் வழக்கமான வங்கி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் நிலை இருந்தது. தற்போது வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், திங்கள்கிழமை முதல் வங்கிச் சேவைகள் வழக்கம்போல் தடையின்றித் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.













