
புதுடெல்லி: செப். 28-
போயிங் நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்களில் ஏற்பட்டுள்ள புதிய மென்பொருள் கோளாறு குறித்து, உலகம் முழுவதும் உள்ள விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணம் ஆர்லிங்டன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு போயிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனம் தயாரித்த 2,400-க்கும் மேற்பட்ட பி737 விமானங்கள் உலகின் பல்வேறு விமான நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் அகாசா விமான நிறுவனங்களிடம் 100 விமானங்கள் உள்ளன.
சில பி737 மேக்ஸ் விமானங்களில் இந்த மென்பொருள் பிரச்னை இருப்பதை போயிங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. விமானம் தரையிறங்கும்போது ஏதேனும் காரணத்தால் முதல் முயற்சி கைவிடப்பட்டு, இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சிக்கும் குறிப்பிட்ட சூழ்நிலையில் இந்தக் கோளாறு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் விமானத்தின் தானியங்கி வழிசெலுத்தல் அம்சம் தற்காலிகமாக செயலிழக்கக்கூடும். இதனால் விமானிகள் தானியங்கி உதவியின்றி, விமானத்தை கைகளால் இயக்க வேண்டிய நிலை உருவாகலாம். இது அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கக்கூடும்.நிரந்தர மென்பொருள் புதுப்பிப்பு வெளியிடப்படும் வரை, இரண்டாவது முறையாக விமானம் தரையிறங்கியதும் அதன் அமைப்பை மீட்டமைக்குமாறு விமான நிறுவனங்களுக்கு போயிங் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பணியில் போயிங் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.













