
சென்னை, அக். 28-
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை சமாளிக்க, வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படாது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் மின் தேவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 ஆயிரம் மெகாவாட் அதிகரித்துள்ளது. அதேநேரம், மத்திய மின் தொகுப்பிலிருந்து எதிர்பார்த்த அளவுக்கு மின்சாரம் கிடைக்காததால் மின் நெருக்கடி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதிகரித்து வரும் தேவையை சமாளிப்பதற்காக, 2 வாரங்களுக்கு முன்பு வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது.
இதில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.31 முதல் அதிகபட்சமாக ரூ.37 வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எரிவாயு உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதால், அதிக விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 2026-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2027-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலகட்டத்தில் உச்ச நேர மின் தேவையை சமாளிக்க 2,100 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நேற்று டெண்டர் கோரப்பட்டது. இதில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நிறுவனங்கள் ரூ.41.50 விலை கோரியிருந்தன. ஏற்கெனவே ரூ.37-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், ரூ.41.50-க்கு மின்சாரம் வாங்கப்படவுள்ளதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.














