Home செய்திகள் தேசிய செய்திகள் அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலை: ட்ரம்ப்

அமெரிக்காவில் மிகப்பெரிய எஃகு ஆலை: ட்ரம்ப்

புதுடெல்லி, செப். 30-
இந்தியாவின் எஸ்ஸார் குழுமம், அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிகப்பெரிய எஃகு ஆலையை அமைக்கிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்ஸார் குழுமம் செயல்பட்டு வருகிறது. இரும்பு, கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது. பிரிட்டன், சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் எஸ்ஸார் குழுமத்தின் கிளைகள் உள்ளன. இக்குழுமத்தின் சார்பில், கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவின் நஷ்வாக் நகரில் மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. அந்த நிறுவனம் சுமார் 16,000 ஏக்கர் பரப்பளவில் இரும்புத் தாது சுரங்கத்தை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மெசாபி மெட்டாலிக்ஸ் நிறுவனம் சார்பில் அயோவா மாகாணத்தின் லீ பகுதியில் புதிதாக எஃகு ஆலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ரவி ரூயாவும், அவரது மகன் ரேவந்த் ரூயாவும் வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு ட்ரம்பை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ட்ரம்ப் கூறியதாவது: “கடந்த ஆண்டு எஃகு பொருட்கள் இறக்குமதிக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே நேரடியாக ஆலைகளைத் தொடங்கி வருகின்றன. தற்போது எஸ்ஸார் குழுமத்தின் சார்பில் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிகப்பெரிய எஃகு ஆலை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் எஃகு உற்பத்தித் துறையில் அமெரிக்கா மேலும் வலுவடையும்” என்று தெரிவித்தார்.