Home செய்திகள் உலக செய்திகள் அமெரிக்க அழுத்தங்களுக்கு ஈரான் பணியாது

அமெரிக்க அழுத்தங்களுக்கு ஈரான் பணியாது

நியூயார்க், செப். 24-
ஐநா சபையின் 81-வது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஈரான் ஒருபோதும் பணியாது என்று தெரிவித்தார். மேலும், தங்கள் நாடு பயங்கரவாதத்தின் இரையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னதாக, ஐநா மேடையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானை அழித்துவிடுவதாகவும், நரகத்துக்கு அனுப்புவதாகவும் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பெசெஷ்கியான், “அமெரிக்காவும் ட்ரம்ப் போன்ற அச்சுறுத்துபவர்களும் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் பலவந்தமான மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஈரான் ஒருபோதும் மண்டியிடாது. தற்காப்புக்காகவே நாங்கள் போராடுகிறோம்; நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல” என்றார். தனது உரையின்போது, போரின் தொடக்கத்தில் ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்த 150-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி அவர் காட்டினார். ஈரானின் உச்சத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதையும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டிய பெசெஷ்கியான், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே ஈரான் தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருவதாகக் கூறினார்.ஹார்முஸ் ஜலசந்தியை பிற நாடுகள் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்த ஈரான் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். போர்ச் சூழல் நிலவினாலும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார். அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள இஸ்ரேலுக்கு விலக்கு அளித்துவிட்டு, ஆற்றல் தேவைக்காக மட்டுமே அணுசக்தியைப் பயன்படுத்தும் ஈரான் மீது தடைகள் விதிப்பது சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலைப்பாடு என்றும் பெசெஷ்கியான் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், ஈரானை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஒப்பந்தம் செய்வதா அல்லது அந்த நாட்டை அழித்து மீண்டும் தலைதூக்க முடியாதபடி நரகத்துக்கு அனுப்புவதா என்ற முடிவை எடுக்க வேண்டியுள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.