
இங்கிலாந்து, செப். 24-
இங்கிலாந்தின் பிரபல அக்குவாரியத்தில், சுறாக்கள் நீந்தும் பிரம்மாண்ட தொட்டிக்குள் காதலன் ஒருவர் தனது காதலிக்கு திருமண முன்மொழிவு செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தின் வென்டோவர் பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷும் பேஜ் குக்கும் நீண்ட நாட்களாகக் காதலித்து வருகின்றனர். கடல் வாழ் உயிரினமான சுறாக்கள் மீது பேஜ் குக்குக்கு அதிக விருப்பம் இருப்பதை அறிந்த ஜேம்ஸ், கிறிஸ்மஸ் பரிசாக ஸ்கெக்னஸ் அக்குவாரியத்தில் சுறாக்களுடன் நீந்தும் அனுபவத்துக்கான டிக்கெட்டை அவருக்கு வழங்கியிருந்தார்.
அதே இடத்தில் தனது திருமண முன்மொழிவைச் செய்ய அவர் முடிவு செய்தார். இதற்காக அக்குவாரிய ஊழியர்களின் உதவியுடன் ஜேம்ஸ் ரகசியமாகத் திட்டமிட்டார். திட்டமிட்டபடி இருவரும் டைவிங் உடைகளை அணிந்து, சுறாக்கள் நிறைந்த தொட்டிக்குள் இறங்கினர். பின்னர் அக்குவாரியம் ஊழியர்கள் இருவரையும் மற்றவர்களிடமிருந்து சற்றுத் தனியாக அழைத்துச் சென்றனர். அப்போது, “என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” என்ற வாசகம் எழுதப்பட்ட பலகையை ஜேம்ஸிடம் வழங்கினர். தொடர்ந்து, தனது வெட்சூட் உடைக்குள் மறைத்து வைத்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை ஜேம்ஸ் எடுத்துக் காட்டி, பேஜ் குக்கிடம் தனது காதலைத் தெரிவித்தார்.
சுறாக்கள் தங்களைச் சுற்றி நீந்திக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத இந்த முன்மொழிவைக் கண்ட பேஜ் குக் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் உறைந்து போனார். இதுகுறித்து பேசிய அவர், “இந்த அனுபவம் முற்றிலும் எதிர்பாராதது. அந்தத் தருணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில், எனக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காற்றடைப்பு உண்டாகிவிடுமோ என்றுதான் முதலில் பயந்தேன்” என்றார்.











