Home செய்திகள் தேசிய செய்திகள் அயோத்தி கோயில் திருட்டு: 7,000 பக்க குற்றப்பத்திரிகை

அயோத்தி கோயில் திருட்டு: 7,000 பக்க குற்றப்பத்திரிகை

புதுடெல்லி:
செப். 24- அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு வழக்கில் காவல் துறையினர் சுமார் 7,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். வழக்கின் விசாரணை அதிகாரியும் அயோத்தி நகரக் காவல் நிலைய ஆய்வாளருமான அசுதோஷ் திவாரி, குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். நான்கு பெட்டிகள் மற்றும் ஒரு அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் அந்த ஆவணங்களைக் கொண்டு வந்தனர். குற்றப்பத்திரிகையில் அறக்கட்டளை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், சிசிடிவி இயக்குபவர்கள், பட்டயக் கணக்காளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட 173 சாட்சிகளின் வாக்குமூலங்கள் இடம்பெற்றுள்ளன. காணிக்கை திருட்டு சம்பவங்கள் 105 முறை நடைபெற்றதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 803 பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி பதிவுகள் துல்லியமாக இருப்பது கண்டறியப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, 86 மதிப்புமிக்க பொருட்கள் பெறப்பட்டதற்கான விவரங்கள் கிடைக்கவில்லை. பணம் எண்ணும் அறையில் முறைகேடுகள் நடைபெற்றதுடன், விதிமுறைகள் மீறப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த அறைக்குள் நுழைந்த மற்றும் வெளியேறிய ஊழியர்கள் முறையாகச் சோதனையிடப்படவில்லை என்றும், பணம் எண்ணும் நேரத்தில் பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. மாற்று உண்டியல்களின் சாவிகள், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி முறைசாரா வகையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிப் பதிவுகள், நிர்ணயிக்கப்பட்ட காலத்தைவிடக் குறைவான காலத்துக்கே உள்நோக்கத்துடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.