
சென்னை: நவ. 26-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க உறுதியேற்போம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1949-ஆம் ஆண்டு இதே நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 1949 நவம்பர் 26-ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச்
சட்டம், 1950 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அந்த நாள் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், அரசியலமைப்பு தினத்தையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.













