Home மாவட்டங்கள் சென்னை தீப விவகாரத்தில் ஆட்சியர்–ஏஎஸ்ஐ முரண்பாடு

தீப விவகாரத்தில் ஆட்சியர்–ஏஎஸ்ஐ முரண்பாடு

மதுரை, நவ. 26:
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்கும், இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கான நேரம், அணுகல் பாதை, நிகழ்ச்சி கால அளவு உள்ளிட்ட ஏற்பாடுகளை, பொதுமக்கள் பாதுகாப்பு, தீ தடுப்பு, தொல்லியல் பாதுகாப்பு, அமைதிப் பராமரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து
மாவட்ட நிர்வாகம் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. நினைவுச்சின்னம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைப் பாதுகாக்க ஏஎஸ்ஐ உரிய நிபந்தனைகளை விதிக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதலே ஏஎஸ்ஐ பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் மலையில் பணியில் இருந்ததாக ஆட்சியர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர், ஏஎஸ்ஐ அதிகாரிகளுடன் ஆலோசித்து அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது அறிக்கையில், காவல் ஆணையருடன் திருப்பரங்குன்றம் சென்று மதியம் 12.30 மணி வரை ஏற்பாடுகளை ஆய்வு செய்ததாகவும், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தத்தமது இடங்களில் பணியில் இருந்ததை உறுதி செய்ததாகவும் ஆட்சியர் கூறியுள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரும்
மலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னேற்பாட்டுக் குழு மலைக்குச் செல்லாததால், காலை 10.08 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், காலை 11.30 மணிக்கு தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றியதாக அவர்கள் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.