
சென்னை, நவ. 2-
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்கள் முதல் மேலாளர் நிலை வரையிலான பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களைத் தேர்வு செய்ய, வெளிநாட்டு மனிதவளக் கழகம் (Overseas Manpower Corporation Limited) முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுப் பணியாளர்களை இனி தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நியமிக்கும் வகையில் அரசு அரசாணை வெளியிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அரசுப் பணிக்காகப் பல ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி, தங்களது இளமையையும் உழைப்பையும் செலவிட்டு காத்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு, காலியாக உள்ள பணியிடங்களைப் போட்டித் தேர்வு மூலம் நிரப்பி நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அரசு, இருக்கின்ற பணியிடங்களையும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.















