Home செய்திகள் உலக செய்திகள் புளோரிடாவில் ஜெட் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

புளோரிடாவில் ஜெட் விமான விபத்து: 9 பேர் உயிரிழப்பு

புளோரிடா, நவ. 1:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி நவ. 1-ம் தேதி இரவு 11.20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் இருந்து பஹாமாஸ் நோக்கிப் புறப்பட்ட விமானமே விபத்தில் சிக்கியது. ‘லியர்ஜெட் 60’ ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், புளோரிடாவின் தெற்கு பகுதிக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அது சாலையில் விழுந்து வெடித்தது. விமானம் தரையில் விழுந்த சில விநாடிகளில் அங்கு தீப்பிழம்பு ஏற்பட்டது.
விபத்து தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளன. சாலையில் விமானம் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. தகவல் கிடைத்ததும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்புப் படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய விமானம் தனியாருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது. எனினும், அதில் பயணம் செய்த 9 பேரின் அடையாளங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின்சாரமும் தடைப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு, விமானி விமானப் போக்குவரத்துக் கட்டளை மையத்தைத் தொடர்புகொண்டு அவசரத் தகவல் தெரிவித்துள்ளார். விமானம் கட்டுப்பாட்டை இழந்து, நிமிடத்துக்கு 10,000 முதல் 20,000 அடி வேகத்தில் கீழ்நோக்கி இறங்குவதாக அவர் கூறியுள்ளார். விமானிக்கு உதவ கட்டளை மைய அதிகாரிகள் முயன்ற நிலையில், “விமானம் தரையில் விழ உள்ளது” என்று விமானி தெரிவித்துள்ளார். அதன் பின்னரே விமானம் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.