
பெங்களூரு, நவ. 2-
கோகர்ணாவில் ராட்சத அலையில் சிக்கி பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் 3 பேர் பரிதாப பலி: 2 பேர் உயிர் தப்பினர்
உத்தர கன்னடா, நவ. 2-
வார இறுதி விடுமுறைக்காக கோகர்ணாவுக்கு சுற்றுலா வந்த பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் 5 பேர், கோகர்ணாவில் உள்ள துப்பணசசி கடலில் ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரை உயிர் காக்கும் படையினர் மீட்டனர்.
பெங்களூரு பெள்ளந்தூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்த 16 ஊழியர்கள் சுற்றுலாவுக்காக கோகர்ணாவுக்கு வந்திருந்தனர். துப்பணசசி கடற்கரை அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இவர்கள், கடலில் இறங்கி குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சீறிப்பாய்ந்து வந்த ராட்சத அலையில் சிக்கி 5 பேர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதைப் பார்த்த விடுதி உயிர் காக்கும் ஊழியர்களும், உள்ளூர் மீனவர்களும் உடனடியாக கடலில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷோபா தாஸ் (வயது 22) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் தீவிர சிகிச்சைக்காக மணிப்பால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது அக்ரம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலில் மூழ்கி மாயமான பெங்களூரு கல்யாண் நகரைச் சேர்ந்த விஷ்வா (24) என்பவரின் உடல் தேடுதல் வேட்டையின் போது பிணமாக மீட்கப்பட்டது.
அதேநேரம் நிஷாந்த் மற்றும் முகமது காசிம் ஆகிய 2 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த கோகர்ணா போலீசார் உடல்களைக் கைப்பற்றி கார்வார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு விடுதி உரிமையாளர்களுக்கு காவல் துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.













