Home மாவட்டங்கள் சென்னை அ.தி.மு.க., – பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி? பிஜேபி புதிய திட்டம்

அ.தி.மு.க., – பா.ம.க.,வுக்கு மத்திய அமைச்சர் பதவி? பிஜேபி புதிய திட்டம்

சென்னை: அக். 29-
தமிழகத்தில், கூட்டணி கட்சிகளுக்கு, இரண்டு மத்திய இணை அமைச்சர் பதவிகளை வழங்க, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றன.
கடந்த சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., கட்சிகள் இடம்பெற்றன. தற்போது, அ.தி.மு.க., – பா.ம.க., – அ.ம.மு.க., கட்சிகள், தே.ஜ., கூட்டணியில் நீடிக்கின்றன. கடந்த 2021ல் இருந்து மத்திய இணை அமைச்சராக இருந்த, தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன், சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., பதவியிலிருந்தும் விலகினார். இந்த இடத்தை கைப்பற்ற, பா.ஜ., தமிழக தலைவர்களும், தமிழக நிர்வாகிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால், அது, தே.ஜ., கூட்டணியை பலப்படுத்துவதோடு, வரும் 2029 லோக்சபா தேர்தலில் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் கருதுவதாக கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கு கவர்னர், துணை ஜனாதிபதி உள்ளிட்ட பதவிகளை அளித்தும், தேர்தல் அரசியலில் எந்த பலனும் கிடைக்கவில்லை. எனவே, வரும் தேர்தலில் தே.ஜ., கூட்டணியை பலப்படுத்தி தக்கவைக்க, நீண்ட கால நட்பு கட்சிகளான, அ.தி.மு.க., – பா.ம.க.,வுக்கு தலா ஒரு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க, பா.ஜ., மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ., தமிழக நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைமுறை தொடங்கி விட்டது. எனவே, தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியை விரிவுபடுத்தவும், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கவும், ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. எனவே, தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.,வினருக்கு பதிலாக, கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.