Home செய்திகள் தேசிய செய்திகள் இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: மோடி

இந்தியாவின் சாதனைகளை உலகறிய செய்ய வேண்டும்: மோடி

புதுடெல்லி, நவ. 13-
இந்தியாவின் சாதனைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளியை ஒட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி அசோகா சாலையில் பாஜக தலைமை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அப்போது ஒருநாள் எனது அறைக்குள் செய்தியாளர்கள் திடீரென நுழைந்தனர். சிலர் அன்புடன் எனது சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தனர். சிலர் இனிப்புகள் வாங்கித் தருமாறு வலியுறுத்தினர். என்ன விசேஷம், எதற்காக இப்போது இனிப்புகள் கேட்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள்தான் அடுத்த குஜராத் முதல்வர். அதை கொண்டாடவே இனிப்புகள் வாங்கக் கோருகிறோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நான் குஜராத் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட செய்தி செய்தியாளர்கள் மூலமாகவே எனக்குத் தெரியவந்தது. ஏராளமான செய்தியாளர்கள் தங்களது சொந்த செலவில் எனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். பூகம்பம், வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின்போது செய்தியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டுகிறேன். ஊடகத் துறை அபாரமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை எட்ட அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். மொபைல்போன் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவின் யுபிஐ பணப் பரிமாற்ற முறை ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவில் 50 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாகப் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுபோல இந்தியா பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அவற்றை இந்திய ஊடகங்கள் உலகறியச் செய்ய வேண்டும். இந்தியர்களின் திறமை மற்றும் சாதனைகளையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்றார்.