
ரியாத், செப். 18- சவுதி அரேபியாவைச் சேர்ந்த ‘அராம்கோ’ நிறுவனம், வினியோக இடர்பாடுகள் காரணமாக இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வினியோகத்தை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியா முக்கிய கச்சா எண்ணெய் வழங்குநராக உள்ளது. வளைகுடா பகுதியில் ஈரான்-அமெரிக்க படைகளுக்கு இடையே நடக்கும் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாயில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அந்த வழியில் நடைபெறும் வினியோகம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.இதனால் மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியான கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ.10,300-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், டேங்கர் கப்பல்களுக்கான கட்டணமும் அதிகரித்துள்ளது. இந்தியா அதிகம் வாங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடியும் குறைந்துள்ளதால், மாற்று கொள்முதலுக்கான செலவு அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
















