Home செய்திகள் உலக செய்திகள் “பெண்கள் சாதிக்க குடும்ப ஆதரவு அவசியம்”

“பெண்கள் சாதிக்க குடும்ப ஆதரவு அவசியம்”

ஐச்சி–நகோயா, செப். 18- 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி–நகோயா மாகாணங்களில் செப்டம்பர் 19-ல் தொடங்குகின்றன. தடகளம், பாட்மிண்டன், கிரிக்கெட், பாய்மரப் படகுப் போட்டி உள்ளிட்டவற்றில் இந்தியாவைச் சேர்ந்த 501 வீரர்–வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 36 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்திய அணியுடன் ஜப்பான் சென்றுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா அளித்த நேர்காணல்: தடகள வீராங்கனையாக இருந்ததால், வீரர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், எதிர்பார்ப்பு, தியாகம் ஆகியவற்றைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என பி.டி.உஷா தெரிவித்தார்.
தாம் போட்டிகளில் பங்கேற்ற காலத்தில் பயிற்சி வசதிகளும் ஆதரவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது சிறந்த உள்கட்டமைப்பு, நவீன உபகரணங்கள், விளையாட்டு அறிவியல் ஆதரவு கிடைப்பதாகவும் கூறினார். அரசு, இந்திய விளையாட்டு ஆணையம் (SAI), இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA), தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் இணைந்து இந்த ஆதரவை வழங்குகின்றன. கேலோ இந்தியா, ‘TOPS’ திட்டங்களும் வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், உடல் இயக்க நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியலாளர்கள் ஆகியோரின் ஆதரவுக் கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார். 2026 ஐச்சி–நகோயா ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பதக்க இலக்கு நிர்ணயிக்கக் கூடாது என்றும், அது அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறிய அவர்,
பயிற்சி மற்றும் போட்டித் தயாரிப்பில் கவனம் செலுத்தி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்ல முடிவுகள் வரும் என்றார். 2012 லண்டன் பாராலிம்பிக்கில் ஒரு பதக்கம் வென்ற இந்தியா, 2024 பாரிஸ் போட்டியில் 29 பதக்கங்களை வென்றது. 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மூன்று தங்கம் உள்பட ஏழு பதக்கங்கள் கிடைத்தன. ஆரம்ப நிலையிலிருந்தே சர்வதேச போட்டி அனுபவம் வழங்க வேண்டும் என்றார்.