Home செய்திகள் உலக செய்திகள் ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடு

சிட்னி, செப். 18- அமெரிக்காவைப் போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடுகள், ஆஸ்திரேலியாவில் வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வெளிநாட்டிலிருந்து நடைபெறும் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் வீடுகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அங்கு அன்றாடச் செலவினங்களும் அதிகரித்துள்ளன. அதேபோல், கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் மீதும் கூடுதல் அழுத்தம் உருவாகியுள்ளது. மக்கள் தொகை உயர்வால் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலை, குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 12 மாதங்களில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்து, 2.79 கோடியை எட்டியுள்ளது. இந்த அதிகரிப்பில், வெளிநாட்டிலிருந்து குடியேறியோர் எண்ணிக்கை மட்டும் 2.92 லட்சமாக உள்ளது. நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், 2028-ம் ஆண்டுக்குள் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 2.25 லட்சமாகக் குறைக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.இந்த இலக்கை அடையும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சர்வதேச மாணவர்கள் இனிமேல் தங்கள் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களுடன் அவர்களது குடும்பத்தினர் அந்நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், படிப்பை முடித்த பின்னரும் ஆஸ்திரேலியாவிலேயே தொடர்ந்து தங்குவதற்காக, அதே தரத்தில் அல்லது அதைவிடக் குறைந்த தரத்தில் உள்ள மற்றொரு பாடப்பிரிவில் சேர்க்கை பெறும் ‘விசா ஹாப்பிங்’ முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படிப்பை முடித்த பிறகு, அங்கேயே தங்கும் நோக்கில் மீண்டும் குறைந்த அல்லது அதே நிலை பாடப்பிரிவில் சேரும் நடைமுறையே ‘விசா ஹாப்பிங்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.