Home தலைப்பு செய்தி இந்தியா கூட்டணி போராட்டம்

இந்தியா கூட்டணி போராட்டம்

பெங்களூரு, நவ. 5-
எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகள் பெங்களூரில் இன்று பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தின.
ஜனநாயகத்தின் மதிப்புகளைப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் பேணவும், வாக்களிக்கும் உரிமையின் புனிதத்தைக் காப்பாற்றும் நோக்கத்துடனும் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இண்டி கூட்டணிக் கட்சிகள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் (ஃப்ரீடம் பார்க்) ‘வாக்கைக்காப்போம், தேசத்தைக்காப்போம்’ (வோட் பச்சாவோ, தேஷ் பச்சாவோ) என்ற முழக்கத்துடன் இந்தப் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தின.
இந்தப்போராட்டத்தில் கே.பி.சி.சி. தலைவர் பி.கே.ஹரிபிரசாத், முதலமைச்சர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), ஆர்.ஜே.டி., என்.சி.பி., சமாஜ்வாடி கட்சி, ம.தி.மு.க., சி.பி.ஐ.(எம்.எல்.), ஆர்.எஸ்.பி., ஜே.கே.என்.சி., ஏ.ஐ.டி.சி. உள்ளிட்ட இண்டி கூட்டணியின் தோழமை கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மத்திய அரசுக்கு எதிராக பாய்சல்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தலைவர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், எஸ்.ஐ.ஆர். நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இந்த பிரம்மாண்ட போராட்டத்தில் திரளான தலைவர்களும், நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்று மத்திய அரசுக்கும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு, கைகளில் பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.
மாவட்ட, தாலுகா அளவிலும் போராட்டம்
இந்தப்போராட்டத்தில் பேசிய கே.பி.சி.சி. தலைவர் பி.கே.ஹரிபிரசாத், “வரும் நாட்களில் மாநிலத்தின் அனைத்து மாவட்ட மற்றும் தாலுகா மையங்களிலும் எஸ்.ஐ.ஆர். நடைமுறைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட மற்றும் தாலுகா அளவிலும் இண்டி கூட்டணி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
“அரசியலமைப்பு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஜனநாயக அமைப்பைச் சீர்குலைக்க பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். செய்யும் முயற்சிகளுக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ராஜினாமா செய்யும் வரையிலும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றவும், மதவாத இந்துத்துவா தேசத்தை உருவாக்கவும் முயலும் பாஜகவின் முயற்சிக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். இண்டி கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கும்” என்றும் அவர் பேசினார்.