
மைசூர், நவ. 5-
நஞ்சன்கூடு தாலுகா ஆகள கிராமத்தில் 4 புலிகள் ஒன்றாக உலாவுவது ட்ரோன் கேமரா கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால் கிராம மக்களிடையே பீதி மேலும் அதிகரித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த பரமேஷ் என்ற விவசாயி மீது புலி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தால் பயமடைந்த கிராம மக்கள், வயல்வெளிகளுக்குச் செல்ல தயங்கி வருகின்றனர். இதையடுத்த கிராமத்திற்கு வருகை தந்த வனத்துறை அதிகாரிகளிடம், புலிகளை உடனடியாக பிடித்து மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கிராமத்தைச் சுற்றி புலிகளின் நடமாட்டம் குறித்து தகவல் சேகரிக்க வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிகாரிகளின் தலைமையில் புலிகளைக் கண்டறிந்து பிடிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட ட்ரோன் கேமரா பரிசோதனையில் 4 புலிகள் காணப்பட்டன. ஒரே பகுதியில் 4 புலிகள் கண்டறியப்பட்டுள்ளது கிராம மக்களின் அச்சத்திற்கு காரணமாகியுள்ளது.
இச்சம்பவம் மற்றும் புலிகளின் நடமாட்டம் குறித்து அறிந்த எம்.எல்.ஏ. தர்ஷன் துருவநாராயண், வனத்துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். புலிகளை விரைவில் பிடித்து கிராம மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தைப் போக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கிராமத்தைச் சுற்றி புலிகளின் நடமாட்டம் தொடர்ந்து நீடிப்பதால் விவசாயிகள் விவசாய பணிகளுக்குச் செல்ல பயப்படுகின்றனர். நிலங்களுக்குச் செல்பவர்களும், கால்நடைகளை மேய்க்கச் செல்பவர்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.













