Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் ஓட்டல் உணவு விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்வு

கர்நாடகத்தில் ஓட்டல் உணவு விலை 10 முதல் 15 சதவிகிதம் வரை உயர்வு

பெங்களூரு, நவ. 5-
கர்நாடக மாநிலத்தில்பால், அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது ஓட்டல் உணவுகள் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு பெரும்.
அதிகரித்து வரும் உற்பத்தி செலவை ஈடுகட்ட நகரின் பல ஓட்டல்கள் உணவுப் பொருட்களின் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. டீ மற்றும் காபி விலையிலும் 3 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பது, பொதுமக்களின் பாக்கெட்டை பிக்பாக்கெட் அடிப்பது போல் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு மாத காலத்தில் அரிசி விலை கிலோவுக்கு 65 ரூபாயில் இருந்து 95 முதல் 100 ரூபாய் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலையும் ஏறியுள்ள நிலையில், பால் மற்றும் தயிர் விலை உயர்வு ஹோட்டல் தொழிலின் செலவை மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே வேறு வழியின்றி உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
பிருஹத் பெங்களூரு ஹோட்டல்கள் சங்கத்தின் பிரதிநிதி பி.சி. ராவ், அரிசி விலை உயர்வு குறித்து பெரும் கவலை வெளியிட்டுள்ளார். ஹோட்டல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அரிசி மற்றும் பாலின் விலை கூடியுள்ளதால் தொழிலை நடத்த முடியாமல் திணறி வருகிறோம் என்றும், இந்த நஷ்டத்தை ஹோட்டல் உரிமையாளர்களே முழுமையாக ஏற்க முடியாது என்பதால் உணவு விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
வடக்கு பெங்களூருவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் மகேஷ் கே. கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தொடங்கியது முதல் கச்சா பொருட்களின் விலை வரிசையாக உயர்ந்து வருகிறது; அனைத்து பொருட்களின் விலையும் ஏறும் போது, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தாமல் தொழிலை நடத்துவது சாத்தியமே இல்லை என்றார்.
எல்லா இடங்களிலும் ஒரே சீரான விலை உயர்வு இல்லை!
நகரத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களும் ஒரே நேரத்தில் கட்டணத்தை உயர்த்தவில்லை. சில ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களின் சுமையைக் குறைப்பதற்காக தற்போதைக்கு டீ மற்றும் காபி விலையை மட்டுமே உயர்த்தியுள்ளன. வரும் நாட்களில் கச்சா பொருட்களின் விலை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, மற்ற சிற்றுண்டிகளின் விலையை உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய பெங்களூரு ஹோட்டல் அதிபர் கிருஷ்ண ராஜ் தெரிவித்துள்ளார்.
முன்பு 100 ரூபாய்க்கு விற்ற தோசையின் விலை சில ஹோட்டல்களில் இப்போது 110 முதல் 115 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. டீ மற்றும் காபி விலையிலும் சராசரியாக 3 முதல் 5 ரூபாய் வரை ஏறியுள்ளது. ஹோட்டல்களின் செலவினங்களுக்கு ஏற்ப இந்த விலை உயர்வில் சிறு மாற்றங்கள் உள்ளன.
தயிர் விலை தொடர்பாக கே.எம்.எஃப். நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை சில ஹோட்டல் உரிமையாளர்கள் பொறுமை காத்து வருகின்றனர். அதேநேரத்தில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் நாட்களில் பொருட்களின் விலை குறையாவிட்டால், மேலும் பல ஹோட்டல்கள் உணவு விலையை உயர்த்த வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் கொந்தளிப்பு!
ஹோட்டல்களின் இந்த திடீர் விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர். ஒரு லிட்டர் பாலின் விலை 8 ரூபாய் உயர்ந்ததற்காக, ஒரு கப் டீ அல்லது காபிக்கு 5 ரூபாய் உயர்த்துவது எந்த விதத்தில் நியாயம் என வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பால் விலை உயர்வைச் சாக்காக வைத்து அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்தக்கூடாது என்றும், மொத்த சுமையையும் மக்கள் தலையில் சுமத்தாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்தால் ஹோட்டல் உணவுகளின் விலை இன்னும் கூடுமோ என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது