Home விளையாட்டு இந்திய மகளிர் ரீகர்வ் அணிக்கு வரலாற்றுத் தங்கம்

இந்திய மகளிர் ரீகர்வ் அணிக்கு வரலாற்றுத் தங்கம்

நகோயா: அக். 2-
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில், இந்திய மகளிர் ரீகர்வ் அணி 10 முறை சாம்பியனான தென் கொரியாவை 5-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றது. இதன் மூலம் 1978-ம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த தென் கொரியாவின் 48 ஆண்டு கால ஆதிக்கத்துக்கு இந்திய வீராங்கனைகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.
நகோயாவில் உள்ள ஒகசாகி மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் கும்கும், அங்கிதா, கீர்த்தி ஆகியோர் அடங்கிய அணி, தென் கொரியாவின் யுன்ஜி லீ, சேயங் காங், யேஜின் ஓ ஆகியோரை எதிர்கொண்டது.
முதல் செட்டில் இரு அணிகளும் தலா 54 புள்ளிகள் எடுத்ததால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. 2-வது செட்டில் தென் கொரியா 56 புள்ளிகளைப் பெற்றது. இந்திய அணிக்காக கடைசி அம்பை எய்த கும்கும், தொடர்ந்து இருமுறை 10 புள்ளிகளைப் பெற்று 56-56 என சமநிலையை ஏற்படுத்தினார். இதனால் ஸ்கோர் 2-2 ஆனது.
3-வது செட்டில் இந்திய வீராங்கனைகள் துல்லியமாக அம்புகளை எய்து 55-51 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் இந்தியா 4-2 என முன்னிலை பெற்றது. தங்கத்தைத் தீர்மானிக்கும் 4-வது செட்டில் தென் கொரியா 54 புள்ளிகளைப் பெற்றது. இந்திய அணியில் கீர்த்தி, அங்கிதா ஆகியோர் தலா 9 புள்ளிகளைப் பெற்ற நிலையில், கடைசி அம்பை எய்த கும்கும் மீது அழுத்தம் ஏற்பட்டது. எனினும், அவர் அந்த அம்பை 10 புள்ளிகளுக்குள் துல்லியமாக செலுத்தி, செட்டை 54-54 என சமநிலைப்படுத்தினார். இதையடுத்து இந்திய அணி 5-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றது.
மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு 1978-ம் ஆண்டு அறிமுகமானது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் தென் கொரியாவே தங்கம் வென்றிருந்தது. அந்த அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்திய முதல் அணியாக இந்தியா வரலாறு படைத்துள்ளது.