Home மாவட்டங்கள் சென்னை இலவச சிலிண்டர் திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு விரைவில்

இலவச சிலிண்டர் திட்டத்துக்கு பயனாளிகள் தேர்வு விரைவில்

சென்னை, நவ. 22-
த.வெ.க. அரசு அறிவித்துள்ள ஆண்டுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகள் தேர்வு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் வரை பயன்பெற வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
த.வெ.க. தனது சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக, ஆண்டுக்கு 6 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கும் ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தை அறிவித்திருந்தது. இதனை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், வருகிற பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். மேலும், சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும், 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 40 லட்சமாக உள்ளது.
இதில் ஒரு சிலிண்டர் இணைப்பு பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சமாகும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கும் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 42 லட்சம் இணைப்புகள் உள்ளன.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை அரசு தொடங்கியுள்ளது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கியாஸ் இணைப்பு பெற்றவர்கள், மகளிர் உதவித்தொகையாக ரூ.1,000 பெறுவோர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ள குடும்பத்தினர் ஆகியோரின் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகள் பட்டியல் கணக்கிடப்படுகிறது. இந்த விவரங்களின் அடிப்படையில், இலவச கியாஸ் சிலிண்டர் திட்டத்தில் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைய உள்ளதாகக் கூறப்படுகிறது. பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படுவதுடன், இதுதொடர்பான அறிவிப்புகளும் விரைவில் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.