
உக்ரைன், நவ. 26-
2022 பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கிய முழு அளவிலான போரில், ரஷ்யா தரப்பில் 7 லட்சம் முதல் 7.20 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனப் புதிய புள்ளிவிவர ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2014-ல் கிரிமியா ஆக்கிரமிப்பு மற்றும் டான்பாஸ் மோதல்களுடன் தொடங்கிய மோதல், தற்போது 5-வது ஆண்டில் நீடிக்கிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடவில்லை. 2022 செப்டம்பரில் 5,937 வீரர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்ததற்குப் பிறகு, எந்தப் புதுப்பிக்கப்பட்ட பட்டியலும் வெளியிடப்படவில்லை. மேலும், 2025 முதல் அரசு நிறுவனமான ‘ரோஸ்ஸ்டாட்’ மக்கள்தொகை விவரங்களை வெளியிடுவதையும் நிறுத்தியது. இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆதரவான ‘சைபர் பார்ட்டிசன்ஸ் ஆஃப் பெலாரஸ்’ மற்றும் ‘சைலன்ட் க்ரோ’ என்ற ஹேக்கர் குழுக்கள், இந்த மாதத் தொடக்கத்தில் ரோஸ்ஸ்டாட் சர்வர்களில் இருந்து தகவல்களைத் திருடி வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தரவுகளை ‘மீடியாசோனா’, ‘மெடுசா’ உள்ளிட்ட ஊடகங்கள் ஆய்வு செய்தன. பிபிசி, 2026 நவம்பரில் வெளியிட்ட தகவலில், பெயருடன் உறுதிப்படுத்தப்பட்ட 2,90,012 ரஷ்ய வீரர்களின் உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. பொதுவெளியில் பதிவாகும் உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கையில் 45 முதல் 55 சதவீதம் மட்டுமே இருக்கலாம் என ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதன்படி, உண்மையான எண்ணிக்கை 5,27,295 முதல் 6,44,473 வரை இருக்கலாம். ‘மெடுசா’–‘மீடியாசோனா’ ஆய்வில், செப்டம்பர் 2026 வரை உயிரிழப்பு 7 லட்சம் முதல் 7.20 லட்சத்துக்கும் மேல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.2025-ல் 18–24 வயது இளைஞர்களின் உயிரிழப்புகளில் 65 சதவீதமும், 25–34 வயது ஆண்களின் மரணங்களில் 59 சதவீதமும் போருடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.














