Home செய்திகள் உலக செய்திகள் வாட்ஸ்அப்பில் அறிமுகம் ‘ஷெட்யூல்டு மெசேஜ்கள்’ வசதி

வாட்ஸ்அப்பில் அறிமுகம் ‘ஷெட்யூல்டு மெசேஜ்கள்’ வசதி

சியாட்டில், நவ. 26-
வாட்ஸ்அப்பில் பிறந்தநாள் வாழ்த்து, அப்பாயின்ட்மென்ட் நினைவூட்டல் அல்லது அலுவலகத் தகவல்களை முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பும் ‘Scheduled Messages’ வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்தால், அந்த நேரத்தில் மெசேஜ் தானாகவே சென்றுவிடும். எனவே, நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவதற்காக முன்கூட்டியே விழித்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அலுவலக அறிவிப்புகள் முதல் நண்பர்களுடனான உரையாடல்கள் வரை பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுவதால், இந்த புதிய வசதி பயனர்களிடையே கவனம் பெற்றுள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியின் மூலம், குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு முன்பாகவும், அதிகபட்சம் 14 நாட்களுக்கு முன்பாகவும் மெசேஜ்களைத் திட்டமிடலாம். தனிப்பட்ட உரையாடல்கள் மட்டுமின்றி, குழு உரையாடல்களிலும் டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பும் வகையில் அமைக்க முடியும். இந்த வசதி அடுத்த சில வாரங்களில் உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ்அப் சேனல்களிலும் இது கிடைக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. வசதியைப் பயன்படுத்த, முதலில் வாட்ஸ்அப்பை சமீபத்திய பதிப்புக்கு அப்டேட் செய்ய வேண்டும். பின்னர், மெசேஜ் அனுப்ப வேண்டிய உரையாடலைத் திறந்து, தகவலைத் தட்டச்சு செய்து, ‘Send’ பொத்தானை அழுத்திப் பிடிக்க வேண்டும். தொடர்ந்து, மெசேஜ் செல்ல வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து உறுதிப்படுத்தினால், அது திட்டமிடப்படும். திட்டமிட்ட மெசேஜ்களை ஒரே இடத்தில் பார்க்கவும், அவற்றை மாற்றவும் அல்லது அனுப்பப்படுவதற்கு முன் நீக்கவும் முடியும்.