Home செய்திகள் உலக செய்திகள் ராஸ் தனுரா எண்ணெய் ஆலையில் ஹவுதி தாக்குதல்

ராஸ் தனுரா எண்ணெய் ஆலையில் ஹவுதி தாக்குதல்

ராஸ் தனுரா: நவ. 26-
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ராஸ் தனுரா ஆலை பலத்த சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபிய கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த சுத்திகரிப்பு நிலையம், நாளொன்றுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் எண்ணெயில் பெரும்பகுதி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று, புதன்கிழமை, ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு அடர்த்தியான கருப்புப் புகையால் சூழப்பட்டிருந்ததாக நாசா செயற்கைக்கோள்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டின.
ஹவுதி ராணுவப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, தாக்குதலில் சுத்திகரிப்பு ஆலை பலத்த சேதமடைந்து தீப்பிடித்ததாகக் கூறினார். எனினும், சவுதி அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை. ஆலையை இயக்கும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவும் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.இந்தத் தாக்குதலின் தாக்கமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரலுக்கு 82 டாலரைத் தாண்டி உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சவுதி அரேபியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஏமன் அரசு செயல்படும் இடைக்காலத் தலைநகரான ஏடன் நகரை நோக்கி ஹவுதி போராளிகள் தரைவழியாக முன்னேறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.