Home செய்திகள் தேசிய செய்திகள் உலகில் புதிய தீவிரவாத அலை: இஸ்ரேல் தூதர்

உலகில் புதிய தீவிரவாத அலை: இஸ்ரேல் தூதர்

புதுடெல்லி: அக். 8:
உலகம் முழுவதும் புதிய தீவிரவாத அலை பரவி வருவதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் புறப்பட்ட ஃபிளைதுபாய் விமானத்தை கடத்திச் சென்று மோதச் செய்யும் முயற்சி அண்மையில் நடைபெற்றதாக ரூவன் அசார் கூறினார். எனினும், அதிர்ஷ்டவசமாக அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் வீரதீரச் செயலும், விமானப் பயணிகளின் துணிச்சலும் இணைந்ததன் காரணமாகவே அந்தத் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஸ்மித் மச்சார் பாராட்டுக்குரியவர் என்றும் தூதர் தெரிவித்தார். சமீபகாலமாக உலகம் முழுவதும் தீவிரமான இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதல்களின் அலை பரவி வருவதாக ரூவன் அசார் கூறினார். தீவிரவாதிகள் தங்களை விட வேகமாகச் செயல்படுவதாகவும், அவர்களைவிட வேகமாகச் செயல்படும் வகையில் நாடுகள் தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டங்களை முறியடிக்க விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். அடுத்த தீவிரவாத அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருப்பதாகவும் ரூவன் அசார் எச்சரித்தார். இந்தியப் பிராந்தியத்தில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஹமாஸ் அமைப்பு உத்வேகம் அளித்துள்ளதாக அவர் கூறினார். இதுபோன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்தார்.