
வாஷிங்டன், நவ. 12-
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சென் ஹுவாங், ஆலிஸ் ஹுவாங் இடையிலான ரகசிய உறவைப் பயன்படுத்தி, சீன நிறுவனங்கள் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சிப்களை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களுக்கான சிப்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாக அமெரிக்காவின் என்விடியா உள்ளது. கடந்த அக்டோபரில் அமெரிக்காவின் முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ஜென்சென் ஹுவாங் மற்றும் ஆலிஸ் ஹுவாங் இடையே ரகசிய உறவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆலிஸுடன் தனக்கு இருந்த உறவை ஜென்சென் ஹுவாங் வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக தனது மனைவி லோரி ஹுவாங் மற்றும் குழந்தைகளிடம் அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.கடந்த 8-ம் தேதி நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “எனது செயல் என் மனைவி மற்றும் குழந்தைகளைப் புண்படுத்தியிருக்கும். இதற்காக மிகவும் வருந்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியாக செயல்பட்டதாகவும், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட மெகாஸ்பீடு நிறுவனம் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. சீனாவுக்கு சில சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், மெகாஸ்பீடு மூலம் என்விடியா சிப்கள் சீனாவுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான சிப்களை சீன நிறுவனங்கள் என்விடியாவிடம் இருந்து பெற்றதாக ‘தி இன்ஃபர்மேஷன்’ செய்தி வெளியிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 2.4 லட்சம் எச்100, எச்200 சிப்களை சீனாவுக்கு கொண்டு செல்ல ஆலிஸ் உதவியதாகவும் கூறப்படுகிறது. அவர் தனது சகோதரி மற்றும் கணவருடன் இணைந்து சீனா, சிங்கப்பூர் முழுவதும் நிறுவனங்களின் வலையமைப்பை உருவாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் உணவகத்தில் எடுக்கப்பட்ட காணொளியில், ஜென்சென், ஆலிஸ் ஆகியோரை அவரது மகள் மேடிசன் ஹுவாங் புகைப்படம் எடுப்பது பதிவாகியுள்ளது.















