Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தர பிரதேசத்தில் ஒவைசி-ஆசாத் மூன்றாவது அணி

உத்தர பிரதேசத்தில் ஒவைசி-ஆசாத் மூன்றாவது அணி

புதுடெல்லி, நவ. 12-
உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பாஜக தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதியும் காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்தச் சூழலில், ஹைதராபாத் மக்களவைத் தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், உத்தர பிரதேசத்தின் நாகினா மக்களவைத் தொகுதி உறுப்பினர் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) ஆகியவை கூட்டணி அமைக்கின்றன. இவர்களுடன் மாநிலத்தின் சிறிய கட்சிகளும் இணைந்து மூன்றாவது அணியை உருவாக்க உள்ளன. உத்தர பிரதேசத்தில் தலித் மக்கள் 21 சதவீதமும், முஸ்லிம் மக்கள் 19 சதவீதமும் உள்ளனர். சுமார் 41 தொகுதிகளில் தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தற்போது மாநிலத்தில் பலவீனமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கட்சியின் பெரும்பாலான தலித் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிய நிலையில், அவர்களில் கணிசமானோர் தற்போது சந்திரசேகர் ஆசாத்தை நோக்கித் திரும்பியுள்ளனர். இதனால், சமூகக் கட்டமைப்பின் அடிப்படையில் ஒவைசி–ஆசாத் கூட்டணி வலிமையானதாகக் கருதப்படுகிறது. இக்கூட்டணியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 40 முதல் 45 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடும் எனத் தெரிகிறது. மீதமுள்ள தொகுதிகளில் ஆசாத்தின் ஏஎஸ்பிகே மற்றும் இதர சிறிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த வாய்ப்புள்ளது. பாஜக ஆட்சி தொடர்வதைத் தடுக்க இண்டியா கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாக ஆசாத் மற்றும் ஒவைசி தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.