Home மாவட்டங்கள் சென்னை போலி நூல் கொள்முதல்: வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி

போலி நூல் கொள்முதல்: வெள்ளை அறிக்கை கோரும் அன்புமணி

சென்னை, நவ. 12-
கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கான நூல் கொள்முதல் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த நூலகத்துக்கு, பதிப்பக உலகில் பரவலாக அறியப்படாததும், தென்னிந்திய பதிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்படாததுமான அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களிலிருந்து அதிக அளவில் நூல்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் பல, இல்லாத நபர்களின் கற்பனைப் பெயர்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை என செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தென்காசியில் கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி திறக்கப்பட்ட மத்திய நூலகத்தில், அகல்விளக்கு பதிப்பகம் வெளியிட்ட சுமார் 2,200 போலி நூல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் பெரும்பாலானவற்றின் விலை ரூ.1,000-க்கும் அதிகம் என்றும், அகல்விளக்கு பதிப்பகத்துக்கு மட்டும் ரூ.27 லட்சம் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் நூல்கள் தென்காசி மட்டுமின்றி ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நூலகங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார். நூலகக் கட்டுமானங்களிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருக்கலாம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகளைத் தொடர்ந்து, அகல்விளக்கு பதிப்பகத்தின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.22 லட்சம் முடக்கப்பட்டதாகவும், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.