
பெங்களூரு, நவ. 20–-
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜிநகர் 5-வது பிளாக், 60-வது கிராஸ், பாஷியம் சர்க்கிளில் வசித்து வந்தவர் இந்துசேகர் (52). கார் டிரைவரான இவரது மனைவி சுனிதா (40). இவர்களுக்கு 17 வயது மகள் உள்ளார். அவர் கல்லூரியில் பி.யூ.சி. படித்து வருகிறார். குடும்பப் பிரச்சினை மற்றும் சொத்து விவகாரம் தொடர்பாக மனைவி சுனிதா, மாமியார் ரூபவதி, மைத்துனர்கள் சிவக்குமார், சங்கர், சிவக்குமாரின் மனைவி திவ்யா, மகன் புனித், சங்கரின் மனைவி நளினி ஆகிய 7 பேரை இந்துசேகர் கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ராஜாஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்துசேகர் மற்றும் அவரது மகளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட சுனிதா, ரூபவதி ஆகியோரின் உடல்கள் தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் மீட்கப்பட்டன. சிவக்குமார், திவ்யா ஆகியோரின் உடல்கள் மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் மீட்கப்பட்டன. மேலும், 7 பேரின் உடல்களும் பல்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்துசேகருக்கு எதிரான சாட்சிகளைத் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் காரில் உடல்களை எடுத்துச் சென்ற வீடியோ காட்சிகள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப ஆதாரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். போலீஸ் காவலில் உள்ள இந்துசேகர் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், மனைவி சுனிதாவுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தின்போது, “உன்னால்தான் என் நிம்மதி போனது” என்று கூறி அவரை ஆட்டுக்கல்லால் தாக்கியதாக தெரிவித்துள்ளார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், சுனிதாவை குளியலறைக்குள் இழுத்துச் சென்றதாகவும், சிறிது நேரத்தில் அவர் இறந்ததாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் சுனிதாவின் தாய், இரு சகோதரர்கள், அவர்களின் மனைவிகள் மற்றும் 7 வயது சிறுவனை வீட்டுக்கு வரவழைத்து ஆட்டுக்கல்லால் தாக்கி கொலை செய்து, உடல்களை மலைப்பகுதிகளில் வீசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் ஆவியாக வந்து விடுவார்கள் என பயந்ததாகவும், இரவில் தூக்கமின்றி தவித்ததாகவும் கூறியுள்ளார். மகள் தைரியப்படுத்தியபோதும், கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்ததாகவும், ஏழு பேரை கொன்றதில் வருத்தமில்லை என்றும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.














