
சென்னை, நவ. 20–-
தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களையும் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளே கண்டுபிடித்துள்ளன. இதனால், தமிழக அரசின் போதைப்பொருள் தடுப்புத் தனிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த விஜய் தலைமையிலான தமிழக அரசு, இதற்காக சிறப்புக் காவல் படையை உருவாக்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம், போதைப்பொருள் தடுப்புக்காக 65 சிறப்புப் பிரிவு காவல் நிலையங்களை அமைக்க ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டது. இதற்காக 1,300-க்கும் மேற்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதைப்பொருள் தடுப்புப் பணியைத் தவிர வேறு பணிகள் வழங்கக் கூடாது என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சென்னை மாதவரம் பகுதியில் ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஐஸ்கிரீம் வேனின் குளிர்பதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 69 பொட்டலங்களில் இருந்து 71.24 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு பல நூறு கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரே நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய ஹெராயின் அளவு இதுவாகும். இந்தச் சரக்கு சென்னையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்ததாகவும், அப்துல் சுக்கூர், ஷபீக் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, அக்டோபர் 16-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கடற்கரை கிராமத்தில் டி.ஆர்.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு 6 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 137 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன், ரூ.10 லட்சம் ரொக்கம், 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கைக்குக் கடத்தத் தயாராக இருந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் பூபாலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் பூபாலன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த இரு சம்பவங்களிலும், தமிழ்நாட்டின் சாலைகள் வழியாக கடற்கரை வரை கொண்டு செல்லப்பட்ட பெருமளவு போதைப்பொருட்களை மாநில உளவுத்துறையோ, தனிப்படைகளோ முன்கூட்டியே கண்டறியவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. டெல்லியில் இருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள், 65 தனிப்படைகள் இருந்தும் பயனில்லை என குற்றம்சாட்டி வருகின்றன.
















