Home செய்திகள் தேசிய செய்திகள் பி.எப். குறைந்தபட்ச இருப்புத்தொகை 10 சதவீதமாக குறைப்பு

பி.எப். குறைந்தபட்ச இருப்புத்தொகை 10 சதவீதமாக குறைப்பு

புதுடெல்லி, நவ. 20–
பி.எப். உறுப்பினர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், பி.எப். கணக்குகளில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத்தொகையை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு குறைத்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் 240-வது கூட்டம் நடைபெற்றது. இதில், பி.எப். சேமிப்பைத் திரும்பப்பெறும் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், முறையான தவணைத் திரும்பப்பெறுதல் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ், ஓய்வு பெறும் பி.எப். உறுப்பினர்கள் தங்களது சேமிப்பை ஒரே நேரத்தில் முழுமையாகத் திரும்பப்பெறுவதற்குப் பதிலாக, வழக்கமான தவணைகளில் பெற்றுக்கொள்ளலாம். மாதம், காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் பணத்தைத் திரும்பப்பெறும் வசதி வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள இருப்புத்தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும். இதன் மூலம், ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் தங்களது சேமிப்பைத் தொடர்ந்து பராமரிப்பதுடன், வருவாயையும் பெற முடியும்.
இந்த வசதி முற்றிலும் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானதாக இருக்கும்.
ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இத்திட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் அமல்படுத்தப்படும் ஆரம்ப கட்டத்தில், 55 வயதைக் கடந்த 6 லட்சத்து 32 ஆயிரம் பி.எப். உறுப்பினர்கள் முக்கிய பயனாளிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேமிப்பைத் திரும்பப்பெறும் காலகட்டத்தில் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால், மீதமுள்ள தொகையை அவரது நியமனதாரர் முழுமையாகவோ அல்லது தவணைகளாகவோ பெற்றுக்கொள்ளலாம். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, மாற்றங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும்.