
சென்னை, அக். 28-
சென்னை திருவல்லிக்கேணி, நடேசன் சாலையைச் சேர்ந்தவர் சையது அஸ்லம் (26). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி மாலை, ஜாம்பஜார்–திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பார்த்தசாரதி கோயில் ஆர்ச் எதிரே சையது அஸ்லம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, அவரது செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சையது அஸ்லமிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் ராயப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் (21), லாயிட்ஸ் ரோட்டைச் சேர்ந்த பெருமாள் (28) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். சரவணன் மீது ஏற்கெனவே 4 குற்ற வழக்குகளும், பெருமாள் மீது 9 குற்ற வழக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.














