Home செய்திகள் உலக செய்திகள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி; இந்தியாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் பதவி; இந்தியாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

நியூயார்க், செப். 27- ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, ‘வி4’ அமைப்பின் நான்கு உறுப்பு நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. தற்போது ரஷ்யாவும் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா.,வின் 81வது பொது சபை கூட்டம் நடந்து வருகிறது. கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள மத்திய ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான, வி4 எனப்படும் ‘விசெகிரேடு’ அமைப்பின் கூட்டம் தனியாக நடந்தது. இதில் பங்கேற்க நம் நாட்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த அமைப்பில் உள்ள போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக்கியா எனப்படும் செக் குடியரசு ஆகியவற்றின் துணை பிரதமர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தினார். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியாவின் நீண்டகால முயற்சிக்கு, வி4 அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆற்றிய தனது உரையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவளித்ததோடு, மேற்கத்திய நாடுகளுக்கான நிரந்தர உறுப்பினர் தகுதியை விரிவுபடுத்துவதை வன்மையாக எதிர்த்தார்.

அவர் பேசியதாவது: ஆசியா, ஆப்ரிக்காவின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதை நாங்கள் ஆதரிக்கிறோம். நிரந்தர இடத்திற்கான பிரேசில், இந்தியாவின் வேட்புமனுக்களை நாங்கள் ஆதரிக்கிறோம், என்றார். அதேபோல் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியாவுக்கு போர்ச்சுகல், மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.