
சென்னை, செப். 27- ஜெம் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 6 பெண் டிஎஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி மீதான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கை விரைவாகவும் நடுநிலையாகவும் விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரும் வகையில், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.
அந்தக் குழுவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் பி.சி. தேன்மொழி, சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டல், எஸ்.பி.யும் தமிழக காவல் துறை ஊடகத் தொடர்பு அதிகாரியுமான ஜெ.முத்தரசி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையர் வி.வி.கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான அனைவருக்கும் விரைவில்சம்மன் அனுப்பி நேரடியாக விசாரணை நடத்த இக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்குத் துணையாக சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த டிஎஸ்பி அந்தஸ்திலான 6 பெண் அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் உணர்வுப்பூர்வமான தன்மையையும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள இந்த 6 பெண் டிஎஸ்பிக்களின் பெயர்களை வெளியிடவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
பெண் புதிய புகார்: வீரமணி வழக்கில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய புகார் கொடுத்துள்ளார். அதில், 10 ஆண்டுகளுக்கு முன்பு எனது 16 வயது மகளை படிக்க வைப்பதாகக் கூறி ‘ஜெம்’ வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தார். அதனால், மனமுடைந்து எனது மகள் தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அப்போதே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது மகளின் மரணத்துக்கு உரிய நீதியை பெற்றுத் தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இப்புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.













