Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடகத்தில் அரசு அதிகாரி காணவில்லை – தேடுதல் வேட்டை தீவிரம்

கர்நாடகத்தில் அரசு அதிகாரி காணவில்லை – தேடுதல் வேட்டை தீவிரம்

கதக்: செப். 28-
அரசு நிதி ஒதுக்காததாலும், ஒப்பந்ததாரர்களின் தொந்தரவு தாங்க முடியாமலும் துறை மேலாண் இயக்குநருக்குக் ‘கடிதம்’ எழுதி வைத்துவிட்டு, கர்நாடக கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவன உதவி செயற் பொறியாளர் பர்வேஸ் என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவரைத் தேட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவம் என்ன?
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பெங்களூரில் நடைபெறும் துறை ரீதியான கூட்டத்தில் பங்கேற்பதாகக் கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட பர்வேஸ், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, செப்டம்பர் 16-ம் தேதி கதக் பெடகேரி காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர்.
ஆந்திராவில் ‘லாஸ்ட் லொகேஷன்’:
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பர்வேஸ் கதக்கிலிருந்து பெங்களூரு சென்றதும், அங்கிருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா நோக்கிப் பயணித்ததும் தெரியவந்தது. அவரது செல்போனின் கடைசி லொகேஷன் விஜயவாடாவைக் காட்டியுள்ளது.
ரூ.40 ஆயிரம் ரொக்கம்:
வீட்டிலிருந்து கிளம்பும்போது அவர் ரூ.40 ஆயிரம் ரொக்கம் எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், இதுவரை தனது ஏடிஎம் கார்டையோ அல்லது செல்போனையோ அவர் பயன்படுத்தவில்லை. செல்போன் சிக்னல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், ஆந்திராவுக்குச் சென்று போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கதக் மாவட்ட எஸ்பி மிதுன் எச்.என். வழிகாட்டுதலில், டிஎஸ்பி தலைமையில் பர்வேஸைத் தேட 5 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகா மட்டுமின்றி வெளிமாநிலங்களிலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
2024-லும் இதேபோல மாயம்!
இதற்கு முன்பாக, கடந்த 2024 பிப்ரவரி மாதத்திலும் பர்வேஸ் 4 முதல் 5 நாட்கள் வரை இதேபோல் மாயமாகி இருந்தார். அப்போது வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளின் தொல்லை காரணமாகவே அவர் சென்றதாகக் கூறப்பட்டது. தீவிர தேடுதலுக்குப் பிறகு, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் அவரை போலீசார் கண்டுபிடித்தனர்.
தற்போது அவர் இரண்டாவது முறையாக மாயமாகியிருப்பது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி விநியோகம் செய்யப்படாதது மற்றும் ஒப்பந்ததாரர்களின் மிரட்டல் குற்றச்சாட்டுகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.