Home மாவட்டங்கள் பெங்களூர் காட்டு யானை தாக்கி தோட்ட உரிமையாளர் பலி

காட்டு யானை தாக்கி தோட்ட உரிமையாளர் பலி

குடகு, நவ. 26-
ஹாசன் மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குடகு மாவட்டம் தாரிக்கட்டே கிராமத்திலும் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தாரிக்கட்டே கிராமத்தைச் சேர்ந்த காபி தோட்ட உரிமையாளர் கேசவய்யா (வயது 50) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
கேசவய்யா வழக்கம்போல இன்று காலை தனது காபி தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டு யானை அவரை ஆக்ரோஷமாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதறி அழுதனர். மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் தோட்டங்களுக்குச் செல்லத் தொழிலாளர்களும், தோட்ட உரிமையாளர்களும் கடும் அச்சமடைந்துள்ளனர். குடகு மாவட்டத்தில் நீடிக்கும் காட்டு யானைகள் தொல்லையைக் கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடியாக விழித்துக்கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.