
கொச்சி:
கேரள மாநிலம் கொச்சியில் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில், 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சியில் உள்ள கைவினைப் பொருள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த தேவிகா (21), கோபிகா (22), இஜாஸ் (21) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் தேநீர் அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தேநீர் அருந்திய பின்னர், அவர்கள் தங்களது இருப்பிடத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
நெடும்பாசேரி அருகே உள்ள சாலையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
விபத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தேவிகா, கோபிகா, இஜாஸ் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சுஹைல் சஜீவ் (19) என்ற இளைஞரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து சுஹைல் சஜீவை கைது செய்த போலீஸார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













