
பெங்களூரு, அக். 12-
கர்நாடக மாநிலத்தின் புலி சரணாலயங்களில் சஃபாரி செய்யும்போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு வனத்துறை கடும் தடை விதித்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் குமார் புஷ்கர் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள பண்டிப்பூர் மற்றும் பிலிகிரிரங்கன் பெட்டா ஆகிய புலி சரணாலயக் காட்டுப் பகுதிகளில் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
புலி சரணாலயங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்குமாறு உச்சநீதிமன்றம் 2025 நவம்பர் 17 அன்று உத்தரவிட்டிருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பின்னணியில் மாநில வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த புதிய விதிமுறையானது புலி சரணாலயங்களின் முக்கிய வனப்பகுதி மற்றும் சூழல் சுற்றுலா மண்டலங்களில் சஃபாரி செல்லும்போது பொருந்தும். வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் இயற்கையான சூழலுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுப்பதே இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகும்.
வயர்லெஸ் வசதி:
சஃபாரியின் போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவசர காலத்தில் தொடர்பு கொள்ள சஃபாரி வாகனங்களில் வயர்லெஸ் (க்ஷதொடர்பு சாதன அமைப்பைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், இந்த அமைப்பின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் காட்டின் இயற்கைச் சூழலைப் பேணிக் காக்கும் நோக்கில் வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.













