Home மாவட்டங்கள் பெங்களூர் பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் மீது பாலியல் அத்துமீறல்: வாலிபர் கைது

பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் மீது பாலியல் அத்துமீறல்: வாலிபர் கைது

பெங்களூரு, அக். 12-
பேய் ஓட்டுவதாகக் கூறி பெண் ஒருவரைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், சதீஷ் பாத்ரி என்பவரைச் சிக்மகளூரு மாவட்டக் காவல் துறையினர் ஜே.பி. நகரில் கைது செய்துள்ளனர். ஹாசனைச் சேர்ந்த பெண் ஒருவருக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பவைத்து, அதை ஓட்டுவதாகக் கூறி சதீஷ் பாத்ரி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண், சிக்மகளூரு மாவட்டத்தின் கொப்பா மற்றும் என்.ஆர். புரா காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தலைமறைவான நபர், ஒரு மாதத்திற்குப் பிறகு காவல் துறையின் வலையில் விழுந்துள்ளார். கொப்பா தாலுகா மேக்கனஹட்லு கிராமத்தில் உள்ள துர்காபரமேஸ்வரி கோயிலின் அருகிலும், தீர்த்தஹள்ளியின் குதுரைகுண்டி பகுதியிலும் அப்பெண்ணை அழைத்துச் சென்று இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக என்.ஆர். புரா காவல் நிலையத்தில் மூடநம்பிக்கை எதிர்ப்புச் சட்டத்தின் கீழும், கொப்பா காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரையைக் காவல் துறையினர் காவலில் எடுத்து அடுத்தகட்டச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சதீஷ் பாத்ரி மீது முன்னரும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. மைனர் சிறுமி ஒருவருக்குப் பேய் ஓட்டுவதாகக் கூறி வலுக்கட்டாயமாகக் கோழி ரத்தத்தைக் குடிக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தன. இச்சம்பவம் கடலோர மற்றும் மலைநாட்டுப் பகுதிகளில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. மற்றொருபுறம், தலைமறைவாக இருந்த நபருக்கு என்.ஆர். புரா காவல் நிலையத்தின் காவலர் காந்தேஷ் என்பவர் காவல் நிலையத்திற்குள்ளிருந்து தகவல்களைத் தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. காவல் துறையினர் சோதனை நடத்துவதற்கு முன்பே தகவல் கிடைத்து வந்ததால், அந்நபர் தனது இடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தகவல் கசிந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் காவலர் காந்தேஷை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் தயாமா பணியிடை நீக்கம் செய்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாகக் காவல் துறையினர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.