Home மாவட்டங்கள் பெங்களூர் ரூ.32.40 லட்சம் மதிப்புள்ள 24 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

ரூ.32.40 லட்சம் மதிப்புள்ள 24 ஆயிரம் லிட்டர் எரி சாராயம் ஏற்றிச் சென்ற லாரி பறிமுதல்

பெலகாவி, அக். 12-
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள எம்.ஹூப்ளி நகரம் அருகே ஹோளி ஹொசூரு கிராமத்தில் இருந்து எம்.கே.ஹூப்ளி நகரத்தை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பாரத் பென்ஸ் நிறுவனத்தின் கே.ஏ.-25-ஏ.ஏ.-3750 பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியை மறித்து சோதனை நடத்தியதில், சட்டவிரோதமாக ஸ்பிரிட் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனடியாக செயல்பட்ட அதிகாரிகள், டேங்கர் லாரியுடன் 24 ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட்டையும் பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரான விஜயபுரா மாவட்டம் போளசிக்கலக்கி கிராமத்தைச் சேர்ந்த பந்தேனவாஜ் நபி சாப் திகணிபிதரி என்பவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேவேளையில் வாகனத்தின் உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பெலகாவி தலைமை இடத்தின் கலால் துறை கூடுதல் ஆணையர், பெலகாவி மண்டல கலால் துறை இணை ஆணையர் மற்றும் பெலகாவி தெற்கு மாவட்ட கலால் துறை துணை ஆணையர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, ராமதுர்க்கா துணைப் பிரிவின் கலால் துறை துணை எஸ்பி தலைமையில் பைலஹொங்கலா கலால் வட்டார அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர்,