Home தலைப்பு செய்தி தலைவர்களை சந்திக்க நீதிபதி மறுப்பு

தலைவர்களை சந்திக்க நீதிபதி மறுப்பு

புதுடெல்லி, அக். 12:
ராகுல் காந்தி மற்றும் இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்கக் கோரியிருந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் நிராகரித்துள்ளார். இதனால், டெல்லியில் இன்று நடைபெறவுள்ள பேரணிக்கு முன்பாக இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று உச்ச நீதிமன்றத்துக்கு பேரணியாகச் சென்று தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக, தலைமை நீதிபதி சூர்யகாந்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதற்கான பதிலை தலைமை நீதிபதி நேற்று மாலை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதியின் அலுவலகத் தகவல்களின்படி, எதிர்க்கட்சிகள் எழுப்ப விரும்பும் விவகாரங்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்களைச் சந்திப்பது பொருத்தமாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு அமைப்பின்படி, அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உச்ச நீதிமன்றம் நிர்வாக ரீதியாகத் தலையிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நீதிமன்றத்தை அணுக விரும்பினால், சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி அனுப்பிய மனுவில், “வாக்குத் திருட்டை” தடுக்க வேண்டும், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) நிறுத்த வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் செயல்முறை மீதான அதிருப்தியே பேரணிக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வாக்குத் திருட்டு, வாக்காளர் பட்டியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளை நீண்டகாலமாக முன்வைத்து வருகின்றன. தலைமை நீதிபதி சந்திக்க மறுத்தபோதிலும், பேரணியில் கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பேரணி இந்தியா கேட்டிலிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு உச்ச நீதிமன்றத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்ட குடிமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரணியை முன்னிட்டு டெல்லி காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முன்னதாக, இண்டியா கூட்டணித் தலைவர்கள் வெள்ளிக்கிழமை குடியரசுத் தலைவரையும் சந்தித்திருந்தனர்.