
சென்னை: ஆக. 29- தமிழக அரசுப் பள்ளிகளில் நடைபெறும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கும் வகையில், முதல்வர் விஜய் செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த திட்டத்தை, அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021 செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் பின்னர், இந்த திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சி மாற்றத்திற்குப் பின், இந்த திட்டத்தின் பெயர் ‘பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம்’ என்று மாற்றப்பட்டது. மேலும், இதை 8-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விரிவுப்படுத்த அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக ரூ.268 கோடி நிதி நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் காமராசர் படித்த விருதுநகரில் உள்ள கே.வி.எஸ் நடுநிலைப் பள்ளியில், முதல்வர் விஜய் இந்த விரிவாக்கத்தை தொடங்கி வைக்க உள்ளார். பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தென் மாவட்டத்துக்கு விஜய் செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.












