Home மாவட்டங்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

மங்களூர்: ஆக. 29-
நீண்டகாலமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதுகுறித்து கூறப்படுவதாவது:
மங்களூர் கிழக்கு காவல் நிலைய எல்லையில் கடந்த 2006-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு (வழக்கு எண்: 166/2006, பிரிவு 379 ஐ.பி.சி) தொடர்பாக, கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் முவாச் (வயது 45) என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். முன்பு உள்ளால் முக்கச்சேரி பகுதியில் வசித்து வந்த இவர், தற்போது கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிகூர் பகுதியில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக மங்களூர் மாநகர காவல் ஆணையர் சுதீர் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதேபோல், வேணூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளை வழக்கு (வழக்கு எண்: 16/2012, பிரிவு 395 ஐ.பி.சி) ஒன்றில் தொடர்புடைய ஸ்ரீனிவாஸ் என்ற சீனிவாசா (43) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவருக்கு நீதிமன்றம் பிடியாணை (வாரண்ட்) பிறப்பித்திருந்தது.
இவரைப் பிடிக்க வேணூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பென்னிச்சன், தலைமை காவலர் கிருஷ்ணா மற்றும் காவலர்கள் பசவராஜ், மோகன் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விஜயநகரா மாவட்டம் ஹரபனஹள்ளியில் தீவிர வேட்டை நடத்தி ஸ்ரீனிவாஸை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக தட்சிண கன்னடா மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.