Home செய்திகள் உலக செய்திகள் போடேகோஷி நதியின் வெள்ளம்சீன எல்லைப் பகுதியை சீர்குலைத்தது

போடேகோஷி நதியின் வெள்ளம்சீன எல்லைப் பகுதியை சீர்குலைத்தது

காத்மாண்டு: ஆக. 29-
நேபாளத்தின் போடேகோஷி நதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் சீன எல்லையை ஒட்டிய பிராந்தியங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது. போடேகோஷியின் கிளை நதியான லெண்டே, பனிச்சரிவு காரணமாக உருவான ஏரி உடைந்தது. இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம், பாறைகள், மண், சேறு என பலத்த அழிவை ஏற்படுத்தியது.
சுனாமி அலைகளுக்கு இணையான இந்த வெள்ளம், கண் இமைக்கும் நேரத்தில் நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களைத் தகர்த்தெறிந்தது. சீனாவை ஒட்டியுள்ள நேபாளத்தின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரசுவா, நுவாகோட், தடிங் ஆகிய 3 மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பிராந்தியம் முழுவதும் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இமயமலையில் இருந்து அடித்துக்கொண்டு வந்த கற்கள், மண், சேறு, சகதி பல அடி உயரத்திற்கு நிறைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த பேரிடரில் பலியானோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கியுள்ளது. 2,500 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போடோகோஷி ஆற்றில் மீண்டும் சேறு மற்றும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போடோகோஷி மற்றும் திரிசுலி பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் மீட்பு பணியாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.